சேரமான் பெருமான்- கழறிற்றறிவார் நாயனார்- 01

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்” : சுந்தரமூர்த்தி நாயனார்
ஞானிகள் எனும் ரிஷிகளுக்கும் இந்த அடியார்களுக்கும் சில வித்தியாசம் உண்டு
ஞானிகளும் ரிஷிகளும் உருவாகி வருவார்கள், ஆனால் சிவனடியார் என்பவர் பிறப்பிலே வருவார்
மானிடருக்கு வியாதியால் வரும் சன்ன வைராக்கியம், தன் உடல்பலத்தால் வரும் தேக வைராக்கியம், எல்லா சுகங்களையும் அனுபவித்து சலிப்பில் வரும் ஐஸ்வர்ய வைராக்கியம் , ஆன்மீக விஷய அவமானத்தால் வரும் பிரபஞ்ச வைராக்கியம், செல்வம் வந்து போவதால் வரும் திரவிய வைராக்கியம், குடும்பத்தாரும் உடன்பிறந்தோரும் செய்யும் செயல்களால் வரும் சங்க வைராக்கியம்,
பெண்களால் கிடைக்கும் ஞானத்தால் வரும் ஸ்தீரி வைராக்கியம். உணவு எனும் விஷயத்தால் கிடைத்த ஞானமான போசன வைராக்கியம், தானம் எனும் குணத்தால் கிடைத்த அவமானத்தில் வரும் பிரதிக்கிரவைராக்கியம் என பலவகைகளில் வைராக்கியத்தில் உருவாகி வருவார் ரிஷிகள், ஞானிகள்
இதனாலே ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பார்கள். ஒவ்வொரு ரிஷிக்கு பின்னும் அப்படி ஒரு அவமான வைராக்கியம் இருக்கும்.
பட்டினத்தாரும் பத்ருஹரியாரும் அப்படி கசப்பான அனுபவத்தால் சிவனிடம் வந்தார்கள்.ஆனால் சிவனிடியார்கள் அப்படி அல்ல, தங்கம் ராஜதிராவகத்தில் தானாக கரைவது போல் இயல்பிலே சிவனில் கரைந்தவர்கள் சிவனடியார்கள் அதில் மகா முக்கியமானவர்கள் நாயன்மார்கள்
அவர்களை எந்த கெட்ட அனுபவமும் தீண்டியிராது, எந்த வெறுப்பிலும் அவமானத்திலும் அடியாராய் ஆகியிருக்கமாட்டார்கள். முன் ஜென்ம பலன்படியோ இல்லை இறைவனில் கலந்த மனதின் கட்டளைபடி காந்தம் கண்ட இரும்பு போல் தானாக சிவனிடம் ஈர்க்கபடுவார்கள்
கன்றினை கண்டால் பசுவுக்கு பால் சுரப்பது போல சிவனை கண்டவுடன் அவர்கள்மனம் தானாய் சிவ அன்பில் சுரந்து பொங்கும்.
இன்று கேரளம் என்பது முன்னாள் சேரநாடு எனும் மலைநாடு. அதிலும் வடக்கு மலைநாடு என்பது கொடுமலை நாடு. கொடு என்றால் உச்சம் உயர்ந்த என பொருள். அப்படி அன்றும் இருந்த இன்றும் இருக்கின்ற ஊர் கொடுங்கலூர். இந்த பகுதி அன்று சேரநாட்டின் ஒரு பகுதியான கோதைநாடு என அழைக்கபட்டது அதை ஆண்ட மன்னன் செங்கோற்பறையன்.
மூவேந்தரில் சேரமன்னர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள், சோழ பாண்டி மன்னர் குடும்பங்களில் ஏற்பட்ட வாரிசு சண்டை அங்கு இல்லை. போட்டி என தம்மை உணர்பவர் துறவு பூணுதல் அங்கு மரபாயிருந்தது. சேர வம்சத்தில் அது ஒரு வியக்கதக்க அம்சமாய் இருந்தது.
ஆம், அரச பதவிக்கு போட்டி என கருதபடுபவர் திருமணம் செய்து மனைவி குழந்தைகள் வந்தால் ராஜ்யத்தில் தகறாறு வரும் அது நாட்டை பாதிக்கும் என்பதால் பெரும்பாலும் பங்காளிகள் துறவியாய் மாறினார்கள், இளங்கோவடிகள் கூட அப்படி உருவானரே.
அப்படிபட்ட கோதை நாட்டில் பெருமாற்கோதை எனும் கோதை நாட்டு அரச வம்சத்தவர் அரசு வேண்டாம் சிவனே போதுமென திருவஞ்சைகளம் ஆலயத்தில் தொண்டராய் அமர்ந்துவிட்டார், ஆலயத்தின் எல்லா திருபணியும் செய்து இறைவனே உயர்ந்தவன் எனும் ஒரே நினைவில் சிவனடியாராய் அங்கு பணிந்து நின்றார்.
கோவிலின் பூஜை , நந்தவனம், திருமஞ்சணம் , வழிபாடு என எல்லாமும் கவனித்து அங்கேயே வாழ்ந்தும் வந்தார், முப்பொழுதும் அவர் பணி சிவபணி.
எல்லாம் நன்றாய் நடந்த நேரம், அங்கு ஆட்சியில் இருந்த சேரமன்னன் செங்கோற்பொறையனுக்கு திடீரென ஆட்சி அலுப்புதட்டிற்று, தான் துறவியாக போவதாக அறிவித்தான். ராஜபிரதானிகள் அதிர்ந்தனர். காரணம் மன்னன் இல்லா நாடு காவல் இல்லா விளைநிலம், மேய்ப்பன் இல்லா மந்தை. “மன்னன் இல்லா நாடு பாழ்” என்பது பழமொழி
அதே நேரம் எல்லோரையும் அரசனாக்கவும் முடியாது, அதற்கான கல்வியும் பயிற்சியும் மரபு வழியாக பயிற்றுவிக்கபட்டு வந்தவை. அந்த பயிற்சி இல்லாதவன் ஆளமுடியாது, மன்னர் வம்சம் இல்லாதவனை மக்கள் முன் நிறுத்தவும் முடியாது
இந்நிலையில் மன்னர் பரம்பரையில் அடுத்து யார் தகுதியான மரபினர் என தேடினால் அவர்களுக்கு பெருமாற்கோதையார் நினைவு வந்தது
ஆம் பெருமாற்கோதையார் அந்த அரசுக்கு உரியவர், ஆனால் அது வேண்டாம் சிவன் போதுமென ஆலயம் புகுந்திருந்தார், ஆனால் இப்பொழுது அவரைவிட்டால் நாட்டை ஆள யாருமில்லை எனும் இக்கட்டான நிலை.
இந்நிலையில் அந்த அரசின் வாரிசு என்ற முறையில் பெருமாற்கோதையாரை அரச கட்டிலில் அமர சொன்னது மந்திரி பிரதானிகள் நிறைந்த நிர்வாக தரப்பு, ஆனால் மன்னன் பதவி சிவதொண்டுக்கு இடைஞ்சல் என கருதிய பெருமாற்கோதையார் அதை ஏற்க விரும்பாமல் சிவதொண்டிலே நிலைத்திருந்தார்
அவர் மனபறவை சிவதொண்டு எனும் அந்த சோலையிலே இளைப்பாற விரும்பியது. மன்னன் பணியும் சிவதொண்டும் கிழக்கும் மேற்கும் போன்றது ஒன்றுகொன்று எதிரானது என்பதால் அதனை ஏற்க தயங்கினார் பெருமாற்கோதையார்
ஆனால் தொடர்ந்து நாட்டுமக்களின் வற்புறுத்தல் அதிகரிக்க, சிவபூஜையில் அமர்ந்து சிவனிடமே உத்தரவு கேட்டார் மாகோதையார், பூஜையில் அசரீரியாக ஒலித்த சிவன் அரசை ஏற்றுகொள்ளுமாறு பதிலளித்தார்.
சிவன் பதிலளித்தும் ஓடி சென்று அரச கட்டிலில் அமர விரும்பாத அந்த அடியார் உருக்கமாக சிவனிடம் மேற்கொண்டு சில வழிகேட்டு வேண்டி நின்றார்
“அய்யனே நானோ சிவனடியார், ஆலய வேலைகள் செய்யும் அளவுக்கு எனக்கு நாட்டை ஆளதெரியாது, இந்நாட்டின் எல்லா உயிர்களை காக்கும் ஆற்றலை நீயே தந்தருள்வாய்” என உருகி நின்றார்
கவனியுங்கள், நாட்டு மக்களை என சொல்லவில்லை “நாட்டின் எல்லா உயிர்களையும் காக்கும் ஆற்றல்” என அவர் கேட்டு நின்றதில் சிவன் மகிழ்ந்து, “அடியாரே..எல்லா உயிர்களின் துன்பங்களையும் நீ அறியும் வண்ணம் விலங்கு பயிர்கள் செடிகொடிகள் என எல்லா உயிர்கள் மொழியும் அறியும் ஆற்றலை உனக்கு தந்தோம், பஞ்ச பூதங்களும் உனக்கு அடிபணியும், மானிட தர்மபடி நன்றாக ஆட்சிசெய்வாயாக” என வாழ்த்தி அனுப்பினார்
கழறு என்றால் விலங்குகள் என பொருள், விலங்கு பறவைகளின் மொழி அறிந்ததால் அவர் கழறிற்றறிவார் என்றானார். கதைத்தல் என்பது மானிடரோடு உரையாடும் மொழி, கழறிற்றல் என்றால் விலங்களோடும் பறவையோடும் உறவாடும் மொழி.
பறவையோடும் விலங்குகளோடும் பேசுவது என்பது சாதாரண மானிடருக்கும் அவர் மனதுக்கும் முடியாத காரியம் ஆனால் எல்லா உயிரிலும் இருக்கும் இறைவனை உணர்ந்தல் என்பது ஆன்மீக மனதுக்கு அது எளிதானது
ரமணரின் வாழ்வு அதை தெளிவாக சொல்கின்றது, விலங்குகளின் மனமும் குரலும் அவருக்கு புரிந்தது என்கின்றது ரமணாசிரம சான்றுகள்.
இந்த டிஜிட்டல் உலகில் படமோ, கிராபிக்ஸோ தகவலோ 0 அல்லது 1 என்ற இரு இலக்கங்களிலே கணிணியில் பதியபடும், பரப்பவும்படும். நாம் எவ்வகையில் உள்ளீடு செய்தாலும், எந்த மொழியில் எந்த படம் வீடியோ என்றாலும் கணிணி நினைவகத்தில் அது 0 அல்லது 1 என்றுதான் பதியபடும்.
மீளெடுத்து காணும் திரையில்தான் அது பல உருவம் மொழி குரல் என பல வகையாக நாம் உள்ளீடு செய்தபடி தோன்றுமே அன்றி அடிப்படை விஷயம் ஒன்றே அதே 0 அல்லது 1
சிவமும் அப்படியே எல்லா உயிரிலும் ஒரே போலத்தான் உண்டு, காட்சிகள் மட்டும் பிராமாண்டமாகவும் சிறியதாகவும் மாறுபட்டு இருக்கலாம் மற்றபடி அடிப்படை ஒன்றே, எந்த கணிணியிலும் 0 மற்றும் 1 கலந்த தகவல்களை உரிய விதத்தில் திரையில் எடுத்தால் பொருள் வருவது போல எந்த உயிரிலும் மூலமாய் இருக்கும் இறை சக்தியினை நோக்கினால் எளிதாக தொடர்பு கொள்ளலாம்
ஆன்மீக மனம் அந்த மொழியினை எளிதாக படித்துவிடும். சில மறுபிறப்புக்கள் விலங்கு பறவைகளாக, மனிதர்களாக மறுபடி வருவதை சிவனில் கரைந்த ஞானமனம் எளிதாக கண்டு கொள்வது அப்படியே
நாட்டின் எல்லா மக்களுக்கு மட்டுமல்ல , எல்லா உயிர்களுக்காகவும் மன்னர் பதவி ஏற்க சிவன் உத்தரவுபடி முடிவு செய்தார் கழறிற்றறிவாளர், அவர் சேரமான் கழற்றறிவார் ஆனது இப்படித்தான்.
ஒருவன் எதை வேண்டாம் என்று விலகி ஓடுவானோ அவனை பிடித்து வைத்து அதை கொடுப்பதும், வேண்டுவதை கொடுக்காமல் விலக்கி வைப்பதும் கடவுளின் விளையாட்டு
கழறறிற்றரிவார் எனும் சிவனடியார் மன்னரானதும், அவர் விரும்பிய சிவதொண்டில் இருந்து விரும்பாத மன்னர் பணிக்கு வந்ததும் அப்படித்தான்.
அவர் மன்னரானாரே தவிர அவரின் மனம் அந்த அடியார் மனமாகவே இருந்தது, அதை நிருபிக்க ஒரு காட்சியும் நடந்தது. பட்டத்து யானையில் அவர் மன்னனாக அரண்மனைக்கு எழுந்தருளிய போது எதிரே ஒரு தொழிலாளி உவர்மணை தலையில் வைத்து சுமந்து வந்தான்
அவன் சலவை தொழிலாளி, அக்காலத்தில் துணிகளை வெள்ளாவியில் வெளுப்பது போல மண்ணால் சலவை செய்யும் ஒரு வழியும் இருந்தது, நுண்ணிய வெண் மணலில் துணிகளை புரட்டி அழுக்கு நீக்கும் ஒரு கலை இருந்தது
அந்த வெண்மணலை , உவர் மணலை தலை கூடையில் சுமந்து வந்த தொழிலாளியின் உடல்முழுக்க அம்மண் ஆங்காங்கே படிந்திருந்தது. இதை கவனித்த கழறிற்றறிவார் யானையில் இருந்து இறங்கி ஓடிவந்து அவனை வீழ்ந்து வணங்கினார்.
ஒரு சாதாரண சலவை தொழிலாளியினை மாமன்னர் வணங்குவது ஏன் என்ற கேள்விகள் எழும்பொழுது அவர் சொன்னார் “இந்த மனிதர் எனக்கு சிவனடியாராகவே காட்சி தந்தார்”, ஆம் மற்றவர் கண்களுக்கு உவர் மண் படிந்த மனிதராக தெரிந்தவர், சிவனடியாரான கழற்றிவாளருக்கு மட்டும் சிவனடியார் கோல காட்சி கொடுத்தார்.
ஆம் சிவனடியார் மனம் அப்படித்தான், அவர்களுக்கு காண்பதெல்லாம் சிவ மயமே
கொடுங்கலூரில் மன்னனாக வீற்றிருந்து நல்ல நீதியினை வழங்கினார் சேரமான், சிவனருள் அவரோடு இருந்ததால் சிறப்பான நீதியினை அவர் வழங்கினார். பஞ்ச பூதங்கள் அவருக்கு கட்டுபட்டு நாட்டுக்கு தேவையானதை கொடுத்தன, விலங்குகள் பறவைகள் மொழி அறிந்து அவற்றின் தேவையினை தீர்த்து வைத்தார். மனுநீதி சோழனின் சாயல் அது.
இதனால் நாட்டு,காட்டு விலங்குகள் தொல்லையோ இதர விலங்கு பறவைகள் தொல்லையோ அவர் நாட்டில் இல்லை. எல்லா உயிர்களும் அவர் ஆட்சியில் மகிழ்வாய் இருந்தன.
பறவைகளை விலங்குகளை நாட்டில் நீதியும் செழுமையும் நிலவ பயன்படுத்தினார், அவரின் பாதி வேலையினை அவைகளே செய்தன.
செடி கொடிகளும் அவரோடு பேச தவறவில்லை. மழையும் வெயிலும் மண்ணும் அவர் சொல்லுக்கு கட்டுபட்டன. இதனால் நாட்டில் சுபீட்சம் நிலவியது
ஆட்சி சிக்கல் நிறைந்தது என்றாலும் நல்ல கப்பல் கிடைத்தவனுக்கு எந்த அலை அடித்தால் என்ன என்பது போல சிவனருள் எனும் கலம் அவரை தாங்கி சென்றது.
ஒரு நல்ல ஆன்மீகவாதி ஆளும் நாட்டில் அமைதி நிலவும், அவனால் அண்டை நாடுகளுக்கு அச்சம் இராது, அவன் மண்ணை ஆக்கிரமிக்கும் எண்ணமும் வராது மாறாக உறவு கொண்டாடுவார்கள். இதனால் நல்ல அமைதி அவர் காலத்தில் நிலவியது
தான் ஒரு கருவி என்றும் சிவனே இந்நாட்டை ஆள்வதாகவும் கருதி அடக்கத்தோடு தன் பணியினை தொடர்ந்தார் சேரமான்.
சிறப்பான ஆட்சி ஒரு பக்கம் என்றாலும் தன் அன்றாட சிவபூஜைகளில் கழறிற்றறிவார் தவறவே இல்லை, அனுதினமும் அவர் பூஜையில் சிவனின் சலங்கை ஒலி கேட்பதும் இன்னும் பல வகைகளில் சிவன் தன்னை வெளிபடுத்துவதும் நடந்து கொண்டே இருந்தது, திருவஞ்சை களம் ஆலயமே அவனின் அரண்மனையும் சபையுமானது.
அந்த நடராஜர் சிலைமுன் கழறிற்றரிவார் அமர்ந்து பூஜை செய்வதும், பூஜையில் சிவனின் கால் சிலம்பொலி அடிக்கடி கேட்பதும் வழக்கமாயிற்று, சிலம்பொலி கேட்டபின் சிவனின் ஏற்றுகொள்ளபட்ட உத்தரவென அவர் பூஜையினை முடிப்பதும் வழக்கமாயிற்று.
இந்நிலையில் மதுரை பாண்டிய மண்ணில் மீனாட்சி ஆலயத்தில் ஒரு அடியவர் பூஜை செய்து வந்தார் அவர் பெயர் பாணபுத்திரன், பாணபுத்திரனுக்கோ மிக்க வறுமை அதை தன் பூஜையில் சிவனிடம் சொல்லி அழுது வந்தார்
பாண புத்திரர் என்பது ஒரு குறிப்பிட்ட பெயர் அல்ல, பாணர் என்றால் பாடுபவர் பாடுபவரில் ஒருவர் என்று பொருள்
சேரமான் என்பது சேரமன்னனை குறிப்பது போல பாண புத்திரர் என்பது பாடுவோரை குறிப்பது
சிவனும் அவர் கனவில் தோன்றி தான் சொல்லும் பாடலை ஓலையில் எழுதி சேரனிடம் கொடுத்து உதவி பெறுமாறு சொல்லி “மதிமலி புரிசை மாடக் கூடற்” எனும் பாடலை கொடுத்தார், அதை கடிதமாக எடுத்து கொண்டு சேரமானை காண சென்றார் பாணபுத்திரர்.
ஒரு கணம் சிந்தியுங்கள், மன்னன் ஒருவனிடம் சிவன் எனக்கு ஓலை கொடுத்தான் என ஒரு அடியார் சென்றால் என்னாகும்? அதை யார் நம்புவார்கள், சீறும் அரசன் தொலைத்துவிட மாட்டானா?
ஆனால் சிவபூஜையில் இருந்து திரும்பிய சேரமான் அந்த பாடலை படித்ததும் மனம் உருகினார், எத்தனையோ மன்னரும் தனவானும் நிலகிழாரும் மூன்று நாடுகளில் இருந்தாலும் சிவன் இவரை தன்னிடம் அனுப்பியதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி
ஆம், சிவன் நினைத்திருந்தால் பாணபுத்திரனை பாண்டிய மன்னரிடமே அனுப்பியிருக்க முடியாதா? இல்லை வேறு அதிசயம் செய்திருக்கமுடியாதா? சிவன் பாணபுத்திரனை அனுப்பியதில் ஒரு காரணமும் இருந்தது.
பாணபுத்திரன் தான் ஒருவரே சிறந்த சிவனடியார் என நினைந்து சண்டையிட்டுகொண்டிருந்தார் அவரிடம் இவரைவிட சிறந்த சிவனடியார் சேரமான் என காட்டும் அவசியம் சிவனுக்கு வந்தது
இன்னொன்று தானம் என்பது வாங்கவும் பெறவும் ஒரு தகுதி வேண்டும், சிவனடியார் ஒருவர் தானம் பெறுவது நல்லோரிடமும் சிவபக்தியில் உன்னதமானவராகவும் இருத்தல் வேண்டும். கஞ்சன் கொடுக்கும் விருந்தும், பொல்லாதோரின் உதவியும் உள்நோக்கம் கொண்டவை அந்த தீய நோக்கம் பொருள், தீய வழியில் வந்த பொருள் என்றால் அந்த தீய சக்தியின் தன்மை பெருபவருக்கும் வரும்
கர்ணன் நல்லவனாயிலும் துரியோதனின் அதர்ம வழியில் நின்றது அப்படியே
இதனால் காய்ந்த கிணறு நல்ல நீரால் நிறைய நல்ல ஊற்றிடமே அனுப்பிவிட்டார் சிவன், பாணபுத்திரனின் ஓலையினை கண்டதும் சிவனே தனக்கு திருமுகம் எழுதியதில் மகிழ்ந்த சேரமான் யாரும் செய்யா காரியத்தை செய்தார்.
தன் அரசின் கஜானா முழுமையும் அவர் முன் வைத்து, தன் அரச பதவினையும் வைத்து எல்லாவற்றையும் எடுத்து கொள்ளுங்கள் என பணிந்து நின்றார், அதை கண்ட பாணபுத்திரன் ஆடிபோய் நின்றார்
அதுவரை தான் சிறந்த சிவனடியார் என நினைந்தவரின் செருக்கு சேரமான செய்த செயலால் உடைந்தது, கலங்கி நின்றார். சேரமானோ பதவியும் நாட்டையும் எடுக்கும்படி வணங்கி நின்றான், சிவனின் திருமுகம் அப்படி அவனை உருக்கி வைத்தது
ஏரி நிறைய மீன் இருந்தாலும் மீன்கொத்தி தனக்கு தேவையான மீனை மட்டும் எடுப்பது போல் தனக்கு தேவையான பொருளை மட்டும் பெற்றார் பாணபுத்திரர், எனினும் அவர் கேட்டதற்கு 3 மடங்கு கொடுத்து மதுரைக்கு அவரை மிகுந்த மரியாதையோடு அனுப்பி வைத்தார் சேரமான்
சிவனே தன்னை மன்னராக்கினார், வரமும் அருளினார்.அத்தோடு அல்லாமல் பாண்டிய நாட்டில் இருந்து தன்னிடம் உதவிபெற அடியாரை அனுப்பினார் எனும் சிந்தனை சேரமானுக்கு கொஞ்சம் அகந்தையினை கொடுத்தது
அவர் மனதில் மெல்லிய கர்வம் தலைதூக்கியது, அடியவர்களில் தான் மிக சிறந்தவராக சிவன் கண்ணில் பட்டதாக எண்ணிகொண்டார், அவரின் உள்ள குறிப்பை அறிந்த கோவில் யானை மெல்ல தலையாட்டியது
பரம்பொருளுக்கு மிகவும் பிடித்தது தாழ்ச்சி, அறவே பிடிக்காதது அகந்தை. சேரமானுக்கு வந்த அகந்தையினை அகற்ற திருவுளம் கொண்டார் சிவன்
வழக்கம் போல் திருவாஞ்சைகோவிலில் சிவபூஜையில் இருந்த சேரமானுக்கு வழக்கமாக கிடைக்கும் அந்த சிவனின் சிலம்பொலி அன்று கேட்கவில்லை. ஒரு நாளும் அப்படி நடந்ததே இல்லை என்பதால் அஞ்சிய சேரமான் கழறிற்றறிவார் தன் காதுகள் மேல் சந்தேகம் கொண்டு எதிரில் இருந்த மணியினை மெல்ல இசைத்தார் அவ்வொலி அவர் காதில் விழுந்தது
மறுபடியும் பூஜை செய்தால் அந்த சிலம்பொலி கேட்கவில்லை, அப்படியானால் சிவன் தன்னை கைவிட்டுவிட்டதாகவும் , சிவனால் கைவிடபட்ட தான் வாழ தகுதி இல்லாதவன் என்றும் உடைந்தார் சேரமான்
ஆம், அனுதினமும் பேசும் மனிதர்களே பேசாமல் முகம் திருப்பினால் தாங்கா மானிட மனம் பரம்பொருள் பேசாவிட்டால் எப்படி துடிக்கும்?
சேரமான் அப்படி துடித்து தன் வாளை உருவி தன் தலையினை வெட்ட துணிந்தபொழுது திடீரென அச்சிலம்பு சத்தம் கேட்டது, எடுத்த வாளை உறையிலிட்டு ஒலிவந்த நடராஜர் சிலையினையே நோக்கி கொண்டிருந்தார் சேரமான்.
சிவன் ஒலியில் சொன்னார் “அன்பனே தில்லையின் என் அடியான் ஒருவனின் பாடலில் லயித்துவிட்டேன் அதனால் உன்னிடம் வர தாமதமாயிற்று..”
அவ்வளவுதான், தான் மிகபெரிய சிவனடியார் எனும் அகந்தை சேரமானின் மனதில் இருந்து சட்டென அகன்றது, மிகபெரிய அந்த மாயை நொடியில் சரிந்தது, தன்னை விட சிவனை கட்டிபோடும் சக்தி இன்னொருவனுக்கு உண்டு என்றால் அவன் தன்னிலும் பக்தியில் பெரியவன் என்பதை உணர்ந்து அப்படியே சரிந்தார் சேரமான்.
யாராக இருந்தாலும் மனம் தன்னை போல் சிந்தையுள்ள ஒருவரின் சிறப்புபற்றி தெரிந்தால் அவரை தேடும், சந்திக்க தேடும். மானிடரின் எந்த பிறப்பும் எந்நிலையிலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஒருதுறையில் சிறந்தவர் அத்துறையில் தன்னிலும் சிறந்தாரை கேள்விபடும்பொழுது மனமார தேடுதல் இயல்பு.
தனக்கு யாருக்குமில்லா வகையில் அரசபதவி அளித்து, எங்கோ இருக்கும் பாண்டிய நாட்டி பாடகனிடம் தன்னை பற்றிய கடிதமும் கொடுக்கும் அளவுக்கு வைத்திருக்கும் சிவனுக்கு தன்னை விட ஒருவன் உவப்பானவனாக இருக்கமுடியுமென்றால் அவன் யார்? அவன் தன்னைவிட எவ்வளவு உயர்ந்தனவாக இருக்கமுடியும் என சிந்தித்தான் சேரமான்
அந்த சிந்தனையில் தெளிவு வந்தது, தெளிவு மனம் நோக்கி சென்றது, அந்த மனம் அவரை தன் குருவாக ஏற்றது. அந்த நொடியில் சுந்தரர் சேரமானின் குரு என்றானார்.
சிவபக்தியின் மகா உன்னதமான சேரமான் இதில் எப்படி விதிவிலக்காக முடியும்? அந்த தில்லையின் அதி உன்னதபக்தர் சுந்தரர் என சிவனே சொன்னபின் எப்படி சந்திக்காமல் இருக்க முடியும்
தன் இருபெரும் அடியார்களை சந்திக்க சிவன் செய்த விளையாட்டு இது என்பது அவருக்கு அப்பொழுது தெரியவில்லை.
சுந்தரர் என்பவர் மிகபெரும் நான அவதாரம், அந்த அவதாரம் இங்கே சிவனடியாராய் வாழ்ந்தபொழுது நிறைய அடியார்களை கண்டது. எத்தனையோ நாயன்மார்களை இணைத்த பெரும் கதை சுந்தருடையது
அந்த ஞான சூரியயனை சுற்றி சுழன்ற நாயன்மார் எனும் கிரகங்கள் ஏராளம்
சிவனே மிக சிறந்த நாயன்மார்களை சுந்தரரிடம் கொண்டு சேர்த்துவந்தார்.வைரம் வெளிச்சத்தில் ஜொலிப்பது போல சுந்தரரிடம் சேர்ந்து பிரகாசமாக ஜொலித்தார்கள் பல நாயன்மார்கள்
பரம்பொருளிடம் ஒருவன் தன்னை முழுக்க சரணாகதியாக்கினால் யார் யாரை அவன் சந்திக்க வேண்டும், எப்பொழுது எப்படி சந்திக்க வேண்டும் என்பதை இறைசக்தி மிக சரியாக செய்யும், சேரமானுக்கும் அது நடந்தது.
தான் ஒரு அரசன் என்றோ, ஒரு நாட்டின் மன்னன் எனும் தகுதியில் உள்ளவன் என்றோ கொஞ்சமும் நினையாத சேரமான் சுந்தரரை காண துடித்தார். சுந்தரரின் தகுதி கேள்விபட்டவுடன் தாயினை தேடும் கன்றாக அவர் மனம் கதற ஆரம்பித்தது
ஒரு மன்னன் இன்னொரு நாட்டிற்குள் செல்லும் பொழுது ஏகபட்ட சம்பிரதாயம் உண்டு, மன்னனிடம் அனுமதி, நட்புறவு பயண விவரம் என ஏகபட்ட கெடுபிடிகள் உண்டு
ஆனால் ஞானியர் உலகமே வேறு அல்லவா? இதை பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைபடாமல் சோழ மன்னனுக்கே தெரிவிக்காமல் அடியார்கோலம் பூண்டு தில்லை நோக்கி நடந்தார் சேரமான்
மலையும் காடும் ஆறுகளும் சேரமானுக்கு வழிவிட்டன, தில்லை வந்து சிவனை நடராஜர் கோலத்தில் வணங்கிய சேரமானுக்கு சுந்தரர் திருவாரூரில் இருக்கும் செய்தி கிடைத்தது
தில்லையில் “பொன்வண்ணத்து அந்தாதி”யைப் பாடினார் சேரமான் பெருமான் , அதை பாடிவிட்டுத்தான் திருவாரூர் நோக்கி நகர்ந்தார்.
சேரமான் தான்போகும் வழியில் சம்பந்தரின் சீகாழியையும் , இன்னும் பல கோயில்களையுங் கண்டு, முடிவில் காவிரித் தென்கரை அடைந்து ஆரூர் அடைந்தார்.
மனதால் தன்னை ஒரு அன்பர் தேடுவதை உணர்ந்த சுந்தரர் தயாராக காத்திருந்தார், உலகில் அதி உன்னத சிவனடியாரை காணும் வேகத்தில் சேரமான் சென்று கொண்டிருந்தார்.
சேரமான் பெருமானே தன்னை தேடி திருவாரூரை நோக்கி வருகின்றார் என்பதை தெரிந்த சுந்தரர் பெரும் வரவேற்போடு அவரை வரவேற்றார். இரு உன்னதமான அடியார்கள் ஆத்மார்த்தமாக சந்திந்த அந்த காட்சிக்கு நாயன்மார் வரலாற்றில் ஈடே இல்லை
இவரா அந்த மாபெரும் அடியார், சிவனையே கட்டிவைத்த அடியார் என சேரமானும் மலை நாட்டிலிருந்து என்னை நோக்கி வந்த அடியார் இவரா? அவருக்கு தன்மேல் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும் என சுந்தரரும் கலங்கி நின்றனர்.
சுந்தர் எனும் தன் குருவினை சேரமான் எனும் சீடன் அங்கு பணிந்து ஏற்றான்.
இருவரும் சிவனே என சொல்லியபடி கட்டி தழுவிய காட்சியினையும், சுந்தரர் காலில் சேரநாட்டு மன்னனே விழுந்த காட்சியினையும் ஆரூர் நகரம் அதிசயமாய் பார்த்து கொண்டிருந்தது.
அதுவரை முன்பின் பார்த்திராத அந்த இருவரும் ஏதோ நெடுநாளைய அன்பர்கள் பழகிகொண்டிருந்தனர், எல்லாம் சிவமயமான மனதால் வந்த நெருக்கம்.
ஆன்மீகத்தில் நெருங்கிய ஆன்மாக்கள் பூர்வ ஜென்ம ஜென்மமாய் இணைந்து வருவன என்பதால் மானிட பிறப்பில் அவை புதிதாக பழக எதுவுமில்லை, எல்லாம் தொடர்ந்து வரும் இயல்பான உறவே
திருவாரூர் ஆலயத்தில் “மும்மணி கோவை” எனும் பதிகத்தை பாடிய சேரமான் பின் பரவையார் மாளிகை அடைந்து தங்கினார், அங்கொரு காட்சி நடந்தது.
(தொடரும்..)