No menu items!
No menu items!
More

  சேரமான் பெருமாள் நாயனார்- 02

  … பரவையார் சேரமானை அரசனாக கண்டு வணங்கி அவனுக்கு தனிமேடையிட்டு அமுதுபடைத்தார், அது அக்கால வழக்கமாய் இருந்தது. அரசன் மட்டும் முக்கனி உண்ணுதல் எனும் பெருமை இருந்தது. தனி மேடையில் அதை படைத்தார் பரவை
  சேரமானோ அந்த மேடையில் சுந்தரரை அமர வைத்து தான் தள்ளி அமர்ந்தார், குருவுக்கான மரியாதை அது. இதில் கலங்கிய சுந்தரர் சேரமானுடன் வந்து அமர்ந்து அமுதுண்டார்.
  சில நாட்கள் அங்கிருந்து சுந்தரருடன் ஆரூர் நாதனை வழிபட்டபின் மதுரை நோக்கி கிளம்பினர்.
  ஆம் பாணபுத்திரனிடம் தனக்கு திருமுகம் கொடுத்தனுப்பிய சோமநாதரை காண விரும்பினார் சேரமான், அங்கு செல்லும் வழியெல்லாம் இருந்த திருமறைக்காடு அகத்தியன்பள்ளி போன்ற தலங்களை வழிபட்டுகொண்டே மதுரையினை அடைந்தார்.
  திருவாலவாய் ஆலயத்தை அடைந்து அதாவது மீனாட்சி அம்மன் ஆலயத்தை அடைந்து தனக்கு திருமுகம் எழுதிய நாதனை பணிந்து வணங்கி அழுது நின்றார் சேரமான், அந்த பாணபத்திரன் சேரமான் வந்திருக்கும் விஷயத்தை பாண்டிநாட்டு மன்னரிடம் சொல்ல மன்னனும் ஓடி வந்து வணங்கினான்
  அங்கு சேரமான் பாடவில்லை வணங்கியபடியே பக்தி பெருக்கில் நின்றிருந்தார். அந்த மகா உன்னத சந்நிதியில் மிக உயரிய பாடல் வரும்படி சுந்தரரை பாட அழைத்தார் , சுந்தரர் அங்கும் ஒரு பதிகம் பாடினார்.
  திருஆலவாய் நாதனை கண்டு மகிழ்ந்து வழிபட்ட சேரமான் தென்னக தலங்களையெல்லாம் தரிக்க எண்ணினார்.
  ஒரு சிவனடியாரின் மனம் அது வாழும் பொழுது ஒவ்வொரு ஆலயமாக வாய்ப்பு கிடைத்தால் செல்ல தோன்றும், அதுவும் இன்னொரு அடியார் இணைந்துவிட்டால் அந்த வாய்ப்பினை விடவே விடாது, ஒருமனமான இருமனங்களும் அப்படி தல யாத்திரை சென்றன.
  மதுரை அடுத்து திருப்பரங்குன்றத்தில் வழிபட்டு ராமேஸ்வரம் சென்ற இருவரும் அங்கு பதிகம் பாடினர், அங்கிருந்து அவர்களின் நினைவு கடலை தாண்டி இருந்த மாதோட்டம் நகரின் திருக்கேதிச்சரம் கோவில்பால் தாவியது. ஆனால் அங்கு செல்ல வழியின்றி இங்கிருந்தே அந்த திருக்கேதிச்சரம் நாதனுக்கு பதிகம் பாடினர், அது இன்றும் உண்டு
  அந்த திருக்கேதிச்சரம் ஆலயம் இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் இன்றும் பொலிவுடன் விளங்குகின்றது
  ராமேஸ்வரத்திலிருந்து நெல்லை வரும் வழியில் அவர்கள் திருச்சுழி எனும் ஊரின் சிவாலயத்தில் தங்கினார்கள். அங்கு கனவில் சில காட்சிகளை சுந்தரர் கண்டு அதிசயத்து அந்த ஆலயத்தினை பெருமைபட வாழ்த்தினார்
  (பின்னாளில் ரமண மகரிஷி அந்த மண்ணில் பிறந்து அந்த ஆலயத்தில்தான் நடை பயின்று வளர்ந்தார்)
  தொடர்ந்து திருநெல்வேலி திருகுற்றாலம் என சிவாலயங்களை தரிசித்த சேரமான் மறுபடி சோழ நாட்டை அடைந்து திருப்புணவாயில் பாதாளீசரம் வழியாக திருவாரூரை அடைந்தார்.
  சேர‌மான் அருளிய ஒளி சூட்சும நூல் ஒன்று உண்டு, ஜீவகாருண்யத்தினை வலியுறுத்தும் மிக முக்கிய நூல் அது, அந்த நூலின் வழி வந்தவரே வள்ளலார். வள்ளலாரின் ஆசிரமத்தில் அப்பாடல் பாடபட்ட காலமும் உண்டு
  வந்து நெடுநாட்களானதால் சேரநாட்டுக்கு செல்ல விளைந்த சேரமான் தனியாக செல்ல விரும்பவில்லை, சுந்தரரிடம் அவர் மனம் அவ்வளவு கலந்திருந்தது.
  இவர்கள் இருவருடனும் அடிக்கடி ஒருவர் வந்து பழகினார் அவர் பெயர் மாசாத்துவன், அவரும் ஒரு அடியார். இருவரும் அவர்மேல் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர்
  ஒரு கட்டத்தில் மசாத்துவான் சோழநாட்டு திருப்பிடவூருக்கு இவர்களை பிரிந்து சென்றார், சேரமான் தனியாக செல்ல மனமில்லாமல் சுந்தரரையும் தன் சேரநாடு அழைத்து வேண்டி நின்றார்.
  ஆம், பணக்காரன் தன் தோழனை தன் செல்வாக்கை காட்ட தன் வீடு அழைப்பான். அழைப்பிற்கு வந்த மன்னன் தன் நாட்டின் வளத்தையும் தன் ஆட்சியின் பெருமையும் பலத்தையும் காட்ட பதிலுக்கு அழைப்பான். பொதுவாக அழைப்பு என்பது தன் தகுதியினை காட்டும் விஷயமாக பதில் மரியாதையாக கருதபடும்
  இங்கோ சுந்தரர் அழைக்காமலே வந்த சேரமான், சுந்தரரை தன் நாட்டுக்கு வரும்படி அழைக்கும் வினோதம் நடந்தது.
  ஆம் ஆலயம் ஒன்றில் மட்டும்தான் பக்தன் தானாக வந்து தெய்வத்தை தன் வீட்டுக்கு வர கெஞ்சுவான், இங்கு அதைத்தான் செய்து கொண்டிருந்தார் சேரமான். சுந்தரரை தன் குருவாக தன் வழிகாட்டியாக கருதி கெஞ்சிகொண்டிருந்தார்.
  பரவையார் எனும் சுந்தரரின் மனைவி அனுமதியுடன் அவரை சேர நாட்டுக்கு அழைத்து சென்றார் சேரமான், காவேரியின் தென்பக்கம் அவர்கள் சென்றபொழுது ஐயாறு என்பது குறுக்கே வந்தது அதில் வெள்ளம் கரைபுரண்டோடியது
  சுந்தரரும் சேரமானும் ஒருசேர சிவனை வேண்டியபொழுது காவேரி இரண்டாக பிரிந்து வழிவிட்டதை சரித்திரம் சொல்கின்றது. அது நடந்திருக்கின்றது இருவர் வாழ்வின் சரித்திரத்திலுமே காணபடும் நிகழ்வு அது
  அவர்கள் இருவர்தான் ஆனால் சிவன் அவர்களுடன் மூன்றாம் நபராக உடன் இருந்தார் என்பதை அப்பொழுதுதான் உலகம் உணர்ந்து கொண்டது
  பிளந்த ஆற்றினை கடந்து சேரநாட்டினை அடைந்தனர் இருவரும், தன் நாட்டின் எல்லையிலே பட்டத்து யானைமேல் சுந்தரரை அமர்த்தி தானே கவரி வீசி அரண்மனைக்கு அழைத்து சென்று அரசகட்டிலில் அமர வைத்து அரசனாக்கி அழகு பார்த்தார் சேரமான்
  துறவிக்கு திண்ணை என்ன அரியாசனம் என்ன? இரண்டும் இன்றல்லவா? அப்படி மன்னன் இருக்கையில் அமர்ந்தாலும் தன் இயல்பில் இருந்த சுந்தரரை திருவாஞ்சகளம் ஆலயம் நோக்கி அழைத்து சென்றார் சேரமான்
  அங்கு “முடிப்பது கங்கை” என தொடங்கும் திருபதிகத்தை பாடினார் சுந்தரர். எந்த திருவாஞ்சைகளம் ஆலயத்தில் சுந்தரன் இசைக்கு நான் அடிமை என சிவன் சொன்னாரோ அதே ஆலயத்துக்கு சுந்தரரை அழைத்து பாடவைத்ததில் மாபெரும் நிறைவும் சிலிர்ப்பும் கொண்டார் சேரமான்.
  இரு உன்னத அடியார்களை இணைத்துவைத்த திருவஞ்சைகள நாதன் புன்னகைத்து கொண்டிருந்தார்.
  சேரநாடு இயற்கை வளங்களுக்கும் யானைக்கும் புகழ்பெற்ற நாடு என்பதால் எல்லா வளங்களையும் யானைகளின் சகல விளையாட்டுக்களையும் மன்னராக அமர்த்தி சுந்தரருக்கு காட்டி கொண்டாடினார் சேரமான், மலைநாட்டு சகல அழகுகளும் வளங்களும் அவர் முன் குவிந்து கிடந்தது.
  ஒரு அடியாருக்கு இன்னொரு நாட்டில் அரசனை மிஞ்சிய வரவேற்பு கிடைத்தது அங்குதான்.
  இதில்மனம் உருகிய சுந்தரர் இதற்கெல்லாம் காரணம் தன் சிவ அன்பு ஒன்றே என நினைந்து நின்றபொழுது திருவாரூர் நாதனை தரிசிக்கும் எண்ணம் மேலோங்கியது. சேரநாடு நீங்க நினைத்து சேரமானிடம் உத்தரவு கோரினார்.
  சிலரின் நட்பு நெடுநாள் பழகினாலும் நீரில் கல்போல் பிரிந்தே இருக்கும், சிலரின் நட்பு சந்தித்த மாத்திரமே நீரில் சர்க்கரை போல் கரையும் , அடியார் நட்பு நெய்யில் ஜோதியாய் எரியும்
  அப்படி சுந்தரரிடம் பக்தியாய் எரிந்த சேரமான் அவர் பிரிவினை தாங்கமுடியாமல் தவித்து வழியனுப்பினார், பெரும் செல்வத்தோடும் இதர ஐஸ்வர்யங்களோடும் அனுப்பினார்.
  திருவாரூர் வந்த சுந்தரருக்கு சில நாட்களில் மனம் கொள்ளவில்லை. அதுவரை யார் நட்பும் கொடுக்காத ஒரு மகிழ்ச்சியினை சேரமானின் நட்பு கொடுத்ததை மெல்ல உணர்ந்தார்.
  மிகசிறு வயதில் இருந்தே தன் மனத்து சிந்தனையெல்லாம் சிவன் கொடுக்கும் சிந்தனை என்பதை உணர்ந்து அவ்வழியே வாழ்ந்து அது சரியென கண்டவருமான சுந்தரருக்கு சேரநாட்டு நினைவு சிவனின் அழைப்பாகவே தெரிந்தது.
  சிவன் புகழ்பாடவும் , சிவனை கொண்டாடவும் ஒரு உன்னத நண்பன் தன்னைபோல் தன்னைவிட சிறப்பாக கிடைத்தால் எந்த அடியாருக்குத்தான் இனிக்காது, அவர் விலகினால் அழுகை வராது?
  அப்பக்கம் சேரமான் மிகபெரும் துயரத்துடன் இருந்தார், இழக்க கூடாதது எதையோ இழந்தது போன்ற உணர்வு அவரிடம் இருந்தது
  முழுக்க சுந்தரரும் அவரின் பக்தியும் பாடலும் சிவன் அவருக்கு செய்யும் சகல விளையாட்டுக்களுமே நிறைந்திருந்தன, உணவும் தூக்கமும் இன்றி தவிக்க ஆரம்பித்தார்
  சுந்தரர் தன் மனைவியரிடம் விடைபெற்று ஒரே சிந்தனையாக சேரநாடு சென்றார், மறுபடியும் சுந்தரர் வந்த மகிழ்வில் மிகபெரிய சக்திபெற்றார் சேரமான், அந்த கொடுங்கல்லூர் அரண்மனை பழைய உற்சாகத்தை பெற்றது
  அங்கு தங்கி இருந்த சுந்தரருக்கு மனதில் விஷேஷமான உணர்வுகள் வந்தன, யாருக்கோ காத்திருந்தது போலவும் அவரை சந்தித்துவிட்டது போலவும் இனி பூலோக கடமைகள் ஏதுமில்லை என்ற எண்ணம் அடிக்கடி தோன்றிற்று.
  அங்கு தங்கி இருந்த கடைசி நாட்களில் சுந்தரருக்கு , தென்னக ஆலயமெல்லாம் சிவனை பாடிய சுந்தரருக்கு கயிலையில் என்ன பாடுவது என்ற சிந்தனை இருந்தது , அதை சேரமானிடம் சொல்லி கொண்டிருந்தார், சேரமான் அப்படி ஒரு பாடலை எழுத சித்தம் கொண்டார்.
  திரு கயிலையில் நாம் இருந்தால் என்ன பாடுவோம் என சிந்தித்த தன் குருவின் சிந்தனையால் தூண்டபட்டு அந்த பதிகம் எழுவதிலே மூழ்கியிருந்தார் சேரமான்.
  சுந்தரர் தன் பூலோக கடமைகள் முடிந்ததாக கருதினார் , ஆம் சேரமான் பாணபுத்திரனுக்கு கொடுத்ததை விட பெரும் பொருளை சுந்தரருக்கு கொடுத்திருந்தார், இடையில் சில இடைஞ்சல்களால் அவை மறைந்தாலும் மறுபடி அவை சுந்தருக்கே கிடைத்தன‌
  இரு மனைவியரை பெற்ற சுந்தரர் அச்செல்வங்களை அவர்களுக்கே பிரித்து கொடுத்தார், அவர்களை அனாதைகளாக வாழ வழியில்லாதவர்களாக சுந்தரர் விடவில்லை, தன் பொறுப்பில் இருந்து தப்பி ஓடவில்லை.
  யாரை சிவன் சுந்தரருக்கு மணமுடித்து வைத்தாரோ அவர்கள் வாழ வழியினை சேரமான் மூலம் செய்திருந்தார், இது மெல்ல சுந்தரருக்கு புரிந்தது.
  ஆம், தெய்வத்திடம் சரணடைந்த ஒருவனின் எல்லா கடமைகளுக்கும் தெய்வம் பொறுப்பெடுக்கும் என்பது இதுதான்.
  சுந்தரர் பூரணத்துவம் பெற்றிருந்தார். சித்தர்கள் சொல்லும் சமாதி நிலை எனும் நிலைக்கு செல்ல அவர் மனம் தூண்டபட்டது. திருவஞ்சைகளம் ஆலயத்தில் “தலைக்கு தலைமாலை” எனும் பதிகம் பாடினார், அதன் பொருள் இவ்வுலக வாழ்வினை வெறுத்தேன் இனி கயிலைக்கு வருவேன் என பொருளில் இருந்தது
  சேர நாட்டு பயணம் சுந்தரருக்கு அவர் சமாதி நிலையின் முன்னோடி, ஆம் அவர் வாழ்வில் சந்தித்த கடைசி நபர் சேரமான், அப்பொழுது யானைமேல் ஏற்றி அவரை அழகு பார்த்தார் சேரமான், அப்படித்தான் சேரநாட்டுக்கு வரவேற்றார்
  கயிலையில் தன் அடியாரை அப்படி வரவேற்க சித்தம் கொண்ட சிவன் இந்திரனின் வெள்ளையானையினை திருவஞ்சகளத்துக்கு அனுப்பி அவரை கயிலாயம் அழைத்தார்.
  “தானைமுன் படைத்தான்” எனும் பதிகம் பாடியபடி சுந்தரர் இருக்க, இந்திரனின் யானை வானம் ஏறவும் திருவஞ்சகளத்துக்கு வந்த சேரமான் நடப்பதை கண்டு திகைத்தார்.
  காரணம் திருகயிலை உலா எனும் அந்த பதிகத்தை எழுதி கொண்டுவந்திருந்தார், அதை சுந்தரிடம் பாடி காட்ட விரைந்து வந்தார் சேரமான்
  ஆசையோடு வந்தால் சுந்தரர் வானுக்கு எழுந்தருளியிருந்தார், குருவிடம் காட்ட வெண்டிய பாடலை காட்டமுடியவில்லையே என ஏங்கிய சேரமான் உடனே அவருடன் செல்ல துணிந்தார்.
  அங்கே அவருக்கு ஒரு சவால் இருந்தது, அவர் மன்னர் நாட்டை ஆளும் மன்னர் அதை கொடுத்தது சிவன். சுந்தரரை அழைத்த சிவன் சேரமானை அழைக்கவில்லை, சேரமானுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை.
  அழைக்காத கயிலைக்கு போகலாமா? இல்லை சிவன் கொடுத்த அரசை ஆளலாமா? சுந்தரரை பிரிய வேண்டுமா? பிரிந்து ஒரு வாழ்வு வேண்டுமா?
  ஒருகணம் திகைத்த சேரமானுக்கு ஞானம் கிடைத்தது, இந்நாட்டின் அரசன் சிவன் அல்லவா? தாம் இல்லாவிட்டாலும் நாடு நடக்கத்தான் செய்யும், முன்பொரு மன்னன் நீங்கியபொழுது தான் வந்தது போல் இன்னொரு மன்னன் வருவான்.
  ஆனால் குரு கிடைப்பாரா? குருவை தொடர்வதே உத்தமம் என முடிவெடுத்தார்.
  சுந்தரர் கயிலைக்கு போகின்றார் என்றோ இல்லை சிவனிடம் நிரந்தரமாக தங்க போகின்றார் என்பதோ சேரமானுக்கு தெரியாது, நம்மை விட்டு எங்கோ செல்கின்றார் விட கூடாது, அவர் பறந்து சென்றாலும் விட கூடாது, அதுவும் அந்த பாடலை பாடிகாட்டாமல் விடவே கூடாது என்றுதான் பின் தொடர நினைத்தார்.
  சுந்தரரை தொடர்ந்து செல்ல சிவனிடம் வேண்டினார் தன் குதிரைக்கு காதில் பஞ்சரட்சரம் ஓதி காற்றுக்கும் உத்தரவிட்டார். பஞ்சபூத சக்தியும் விலங்குகளிடம் பேசும் ஆற்றலும் பெற்றிருந்த சேரமானுக்கு எதுவும் எளிதானது என்பதால் அவர் குதிரையும் கயிலாயம் நோக்கி பறந்து சென்றது
  அங்கு சென்றபின்பே அது கயிலாயம் என்பது தெரிந்தது, ஆயினும் குரு இருக்கும் கயிலாயமே தனக்கும் நிரந்தரமான இடம் என மனதால் கருதி அங்கே ஏக்கத்தோடு நின்று கொண்டார்
  ஆனால் சிவன் உத்தரவிட்டது சுந்தரருக்கே என்பதால் வாசலில் நின்ற சேரமானை நோக்கி புன்னகைத்த சிவன் “உம்மை நாம் இன்னும் அழைக்கவில்லை” என்றாலும் “சுந்தரர் இருக்குமிடமே நானும் இருப்பேன்” என தெரிவித்து நின்றார் சேரமான் .
  சுந்தரர் அவரை உள்ளே அழைக்கவில்லை அழைக்க அனுமதியுமில்லை அது சிவனின் சாம்ராஜ்யம், அவரையன்றி யாருக்கும் அதிகாரமில்லை
  சேரமான் பெருமானின் குரு பக்திக்கு மெச்சி அவரை அனுமதித்த சிவன், தன் சிவகண தலைவர்களாக இருவரையும் இருக்க அருள்பாலித்தார் சிவன்
  அங்கே திருகயிலாய ஞான‌ உலா எனும் பதிகத்தை பாடினார் சேரமான். அதை தன் மனதால் உணர்ந்த மாசாத்துவன் சோழநாட்டின் திருப்பிடவூரில் ஆலயத்தில் சேர்த்தான். அப்பாடல் இன்றும் உண்டு , “குட்டி திருவாசகம்” என புகழபடும் உருக்கமான பதிகம் அது.
  சுந்தருக்காய் எழுதி கடைசியில் சிவன் சந்நிதியிலே அதை தமிழில் பாடும் பேறு பெற்றார் சேரமான்.
  வாழ்வில் 7 நிலையிலும் ஒரு பெண் பாடுவதாக அமைந்த அப்பதிகம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் மனநிலைக்கான சிவபக்தியினை அவ்வளவு உருக்கமாக சொல்லும்
  அந்த ஞான உலா நூலில் சேரமான் பெருமாள் அரிவைப் பெண் ஒருத்தி பற்றி பாடும் போது ‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு’ என்ற திருக்குறளையும், பேரிளம் பெண் ஒருத்தி பற்றி விவரிக்குமிடத்து, ‘‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண் தொடி கண்ணே உள’’ என்ற திருக்குறளையும் அப்படியே தன் பாடலடிகளில் இணைத்துக் காட்டியுள்ளார்.
  ஆம் தமிழன் தமிழில் கயிலையில் திருகுறளையும் சேர்த்து சேரமான் உருவில் பாடி நின்றான்
  சுந்தரரோடு கயிலையில் ஐக்கியமான சேரமான் கழற்றறிவாரின் வரலாறும் வாழ்வும் சொல்லும் தத்துவமென்ன?
  வாழ்வில் தன்னை முழுவதும் ஒப்புகொடுத்தவர் சேரமான். அரசபரம்பரையாக இருந்து அரசு வேண்டாம் சிவனின் திருவடி போதும் என முடிவெடுத்தார். ஆம் சிவன் தொண்டே வாழ்வின் பயன் என முடிவெடுத்தார்.
  ஒவ்வொருவருக்கும் கனவிலும் கிடைக்கா மன்னர்பதவி தனக்கு கிடைத்ததும் அவர் ஓடிசென்று அமரவில்லை மாறாக சிவனிடமே உத்தரவு கேட்டார், அவரை மன்னனாக அனுமதித்தது சிவனே
  ஆம் அந்த அளவு சிவனில் அவர் மனம் கரைந்திருந்தது. ஆண்டி கோலமும் மன்னன் கோலமும், ஆலய திண்ணையும் அரியாசனமும் ஒன்றே எனும் தெய்வீக ஞானதன்மை வரும் அளவு கலந்திருந்தது.
  எவ்வளவுக்கு அவரின் மனம் சிவனில் கரைந்திருந்தது என்றால் “எல்லா உயிருக்குமான ஆட்சியினை நான் கொடுக்க வேண்டும்” என கேட்டதில் இருந்தது. இது யாருடைய மனம் “கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பான்” எனும் சாட்சாத் ஈசனின் கருணை மனம்
  ஆம், எல்லா உயிரையும் ஒன்றாக கருதும் சிவனின் மனம் அவருக்கு வந்தது அந்த அளவு அவர் கலந்திருந்தார், அதுதான் சித்த புருஷர்களுக்கெ மட்டும் சாத்தியமான கழறிற்று என சொல்லபடும் அந்த விலங்குகளோடு பேசும் கலையினை பஞ்ச பூதத்தை கட்டுபடுத்தும் சக்தியினை கொடுத்தது
  சிவ பக்தியில் கலந்து சிவ அம்சமாகவே மாறி நின்றார் சேரமான். அதுதான் அவர் பக்தியின் மாபெரும் விஷயமாக கவனிக்கதக்கது.
  சிவனும் அவருக்கு மன்னர் பதவி கொடுத்து சோதித்தார், மன்னர் பதவி என்பது சகல சுகங்களையும் அதிகாரங்களையும் அதன் போதையினையும் கொடுக்கும் ஒரு கிரீடம், ராஜ போதை அது.
  ஆனால் அதிலும் சிக்காமல் அங்கும் தான் ஒரு அடியார் என்பதை மனதில் கொண்டு தெருவில் வந்த வெள்ளைமண் பட்ட சலவைதொழிலாளியினை விழுந்து வணங்கி தான் மாறவில்லை என்பதை காட்டினார் சேரமான்.
  பாணபுத்திரனை சிவனே அனுப்பினார் என்பது இரு தத்துவங்களை கொண்டது முதலாவது தகுதியானவர்கள் தகுதியானவர்களிடம் மட்டுமே உதவி வாங்க வேண்டும் என்பது, இரண்டாவது மன்னனாகிவிட்ட சேரமான் எப்படி அடியாருக்கு அதுவும் அடுத்த நாட்டு அடியாருக்கு உதவுகின்றான் என சோதிப்பதற்க்கு
  பாண்டிநாடும் சேரநாடும் பகைநாடுகள் யுத்தம் பல கண்ட நாடுகள், பாண்டிநாடு எக்காலமும் சேரநாட்டை அழிக்க தேடும் தேசம் என்பதையெல்லாம் நினைவில் கொள்ளாமல் அடியார் என்றதும்
  தன் அரசையே கொடுக்க முன்வந்து அந்த சோதனையிலும் தப்பினார் சேரமான்
  சுந்தரர் அவருக்கு வைக்கபட்ட கடைசி சோதனை அல்லது திருவஞ்சைகளத்தில் இருந்துதான் அவர் கயிலாயம் வரவேண்டும் அதற்கு சேரமான் கருவியாக இருத்தல் வேண்டும் என வைக்கபட்ட திட்டம்.
  அதில் கொஞ்சமும் தயக்கமின்றி சிவனுக்கு பிடித்த அடியார் என் மனதுக்கும் உகந்தவர் என சொல்லி ஓடிசென்று அவரை குருவாக கண்டு, அவருக்கு தன் அரசையே தந்து ஒரு கட்டத்தில் அவருடனே கயிலாயமும் எழதுணிந்து மண் அரசைவிட சிவனும் சிவன் அடியார் பாதமே மகா உயர்வானவை என நிரூபித்து நாயன்மார் என்றானார் சேரமான்
  ஒரு கவுன்சிலர் பதவியினையே விட்டுகொடுக்கா உலகில், இந்த பூமிபந்தில் ஒரு முனையளவுக்கும் வராத தமிழகத்து தற்காலிக‌ முதல்வர்பதவிக்கே அவனவன் போட்டி போடும் உலகில், ஒரு நாட்டுக்கு அரசாள வாய்பிருந்தும் அந்நாட்டை பூமியின் எல்லைவரை பரப்பும் வலு இருந்தும் சிவனின் பாதம் போதும் என்றிருந்த சேரமானின் மனம் நிச்சயம் அசாத்தியமான சிவபக்தி நிறைந்த மனமே.
  சேரமான் கழறிற்ற‌றிவார் குருபூஜை ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடபடும், அவர் அரசாண்ட கொடுங்கலூர் இன்றும் உண்டு, மலபார் கடற்கரை பக்கம் பெரியாறு கரையில் அந்த ஊர் இன்றும் உண்டு.
  அந்த கோவிலின் இன்றைய பெயர் திருவஞ்சைகளம் மகாதேவசாமி கோவில், கேரளாவின் ஒரே ஒரு சைவ தலம் இதுதான்
  பரசுராமர் தாயினை கொன்ற பாவத்தை இங்குதான் தீர்த்தார், அவரின் பாவம் மன்னிக்கபட்ட இடம் அது. அங்குதான் சேரமான் பூஜித்த நடராஜர் சிலை இன்றும் உண்டு
  கோவிலின் பிரதான வீதியில் இன்றும் “யானை மேடை” எனும் இடம் உண்டு, அங்கிருந்துதான் சுந்தரர் கயிலைக்கு எழுந்தருளினார்.
  அங்கு சேரமான் கழறிற்றறிவாளர் சிலைகளும் சுந்தரர் சிலைகளும் வாழ்வியல் சிலைகளாக காட்சிபடுத்தபட்டு அவர்களின் காலம் எக்காலமும் நிற்கும்படி வழிவகை செய்யபட்டுள்ளது
  இன்று கொடுமலையாளத்தில் சிக்கிவிட்டாலும், கேரள வைதீக முறை வழிபாடு இருந்தாலும் ஆடிமாதம் சுவாதி நட்சத்திரமன்று சேரமான் குருபூஜை சுத்த தமிழில் தமிழக விதிப்படி நடைபெறும்
  அந்த நாயனார் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்த சேவைக்காக இன்றும் கேரளாவில் ஒரே சைவ தலமாகவும் தமிழ் முழங்கும் இடமாகவும் அதை தர்மம் காத்து நிற்கின்றது
  கேரளா செல்லும்பொழுது அந்த திருவஞ்சகளம் மகாதேவசாமி கோவிலுக்கு செல்ல மறக்காதீர்கள், பரசு ராமன் முதல் சுந்தரர் வரை மானிட ஜென்மம் நீங்கி மோட்சம் பெற்ற தலம் அதுவே, அங்கு வழிபடுங்கள்.
  தமிழகத்தில் சேரமானின் குருபூஜை சில இடங்களில் பிரமாதமாக கொண்டாடபடும் அதில் அந்த திருச்சி அருகிருக்கும் திருபட்டூர் ஆலயமும் ஒன்று, அங்குதான் மாசாத்துவான் கயிலையில் சேரமான் பாடிய திருகயிலை உலாவினை மனதால் கண்டு இங்கு சமர்பித்தான், அந்த திருபடவூர் இன்று திருபட்டூர் ஆயிற்று
  அந்த திருபட்டூர் ஆலயத்தில் சேரமான் குருபூஜை சிறப்பாக நடைபெறும்
  முன்பு சேரமன்னர்கள் அடிக்கடி வணங்கிய‌ திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி சுவாதி சிறப்பாக கொண்டாடபடும் . அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் முடிந்த பிறகு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும்.
  அன்று செந்தூர் கோவில் யானை முழுக்க வெள்ளை சாம்பல் பூசி சுந்தரர் ஐராவதம் யானையில் எழுந்து சென்ற அந்த காட்சி நினைவுகூறபடும். இது இன்றும் உண்டு
  தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்த இராஜராஜசோழன் சேரமானுக்கு தனி இடம் கொடுத்தான்
  அவ்வாலயத்து கருவறையைச் சுற்றியுள்ள சாந்தார அறையில் திருவஞ்சைக்களத்துக் கோயிலில் பதிகம் பாடும் சுந்தரரின் காட்சி, யானை மீதேறி சுந்தரரும், குதிரை மீதேறி சேரமான் பெருமாளும் விண்ணகம் வழியே கயிலை செல்லும் காட்சி, கயிலையில் சுந்தரரும் சேரமான் பெருமாளும் ஈசனார் முன்பு அமர்ந்திருக்க, சேரர் திருக்கயிலாய ஞான உலா பாடும் காட்சி என அற்புதக் காட்சிகளை வண்ண ஓவியமாகத் தீட்டச் செய்துள்ளான்.
  பொலிவோடு திகழும் அவ்வோவிய காட்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவஞ்சைக்களம் கோயில் எவ்வாறு திகழ்ந்தது என்பது தத்ரூபமாக சித்திரிக்கப் பெற்றுள்ளது. அ
  ஞ்சைக்களத்து கோபுரம், ஸ்ரீவிமானம், முன்மண்டபத்தில் நடராஜப் பெருமானின் செப்புத் திருமேனி இடம் பெற்றிருப்பது, திருச்சுற்றில் கங்கை எனும் குளம் திகழ்வது, கோயில் முன்பு அமர்ந்தவாறு சுந்தரர் பதிகம் பாடுவது ஆகிய அனைத்தும் அவ்வோவியக் காட்சியில் இடம் பெற்றுள்ளன.
  இன்றும் ‘‘அஞ்சைக் களத்து சபாபதி’’ என்று தமிழில் பெயர் பொறிக்கப் பெற்ற நடராஜர் திருமேனி அங்கு உண்டு
  சேரமான் போல எல்லாவற்றையும் சிவனிடம் விடுத்து வாழ்வில் எல்லா கட்டத்துக்கும் சிவனே பொறுப்பு என சரணடையுங்கள், அப்படி செய்தால் சிவனின் அம்சம் உங்களிலும் இறங்கும் சேரமானை போல சிவனாக மாறுவீர்கள்
  அன்பே சிவம் எனும் அந்த பேரன்பு உங்களிலும் நிரம்பி வழியும், எல்லா உயிரிலும் இருக்கும் சிவம் உங்கள் கண்களுக்கு தெரியும் அதை உணர்வீர்கள்
  பிரஞ்சம் உங்களுக்கு வழிகாட்டும், உங்களுக்கு யார் சரியானவர்களோ அவர்களே உங்களை தேடிவருவர், உங்களுக்கு பொருத்தமான குருவினை வழிகாட்டியினை சிவனே தருவார்
  தாழ்ச்சியும் அன்புமே சிவன் விரும்புவது, சிவனின் குணமும் அதுவே. அதை கைகொண்டு சிவன் காட்டும் குருவினை தயக்கமின்றி ஏற்றுகொள்ளுங்கள். நல்ல குருவினை கொண்டாடுங்கள்
  மன்னனாக இருந்தும் அடியார் முன் அடியாராக நின்ற சேரமான் எல்லா மானிடருக்கும் நல்ல எடுத்துகாட்டு அப்படி அடியாரை கொண்டாடுங்கள், அந்த குருவினை பிரிய நினையாதீர்கள்
  அந்த குரு உங்களுக்கு நல்வழி காட்டி நித்திய பேரானந்த வழிக்கு அழைத்து செல்வார், சேரமானை கயிலாயத்துக்கு அழைத்து சென்றது போல் அழைத்து செல்வார்.
  குருவே சேரமானை ஈர்த்தார், குருவிடம் தன்னை முழுக்க சரணடைந்து அவருடனே இருந்து அவரை போல் சிந்தித்த சேரமான் அழியா இடம் பெற்றார், காலத்தால் அழியா காவியம் படைத்து கயிலையில் பெருமையுடன் மானுட உடலுடனே புகுந்தார்.
  ஆம் சரணடைதல் முழுக்க சிவனை சரண்டைதல் என்பதே சேரமானின் தத்துவம், சரணடைந்து சிவன் காட்டியவழியில் மகா தாழ்ச்சியாய் மன்னர் பதவியில் பற்றே இல்லாது ஒரு அடியாராய் கடைசி வரை நின்று காட்டிய அந்த சேரமான் எல்லா மானிடருக்கும் எக்காலமும் எடுத்துகாட்டு
  மன்னனோ , அதிகாரியோ, சாமான்ய சம்சாரியோ யாராயினும் சிவன் வழி அடியார் வாழ்வுக்கு அந்த நாயனார் முக்காலமும் பெரும் எடுத்துகாட்டு
  மகா முக்கியமாக சிவனருள் கிடைத்தால் கொஞ்சமும் அகந்தை கொள்ளல் கூடாது, அகந்தையும் பெருமையும் சிவனுக்கு கொஞ்சமும் பிடிக்கா விஷயங்கள். எக்காலமும் பக்தியிலும் ஞானத்திலும் உங்களை விட பெரியவன் ஒருவன் உலகில் உண்டு என்பதை மனதில் வைத்து கொண்டே இருங்கள்
  சிவனை நம்பியோர் யாரும் கைவிடபடவில்லை என்பதுதான் சேரமான் கதையின் முக்கிய விஷயம். சேரமான், பாணபுத்திரன், சுந்தரர் என ஒவ்வொருவர் வாழ்வும் அதை தெளிவாக சொல்கின்றது.
  சுந்தரரின் இல்லற கடமையான செல்வம் சேர்த்தலை சேரமான் மூலம் நிரம்ப கொடுத்து அவரின் பொறுப்பினை சிவனே செய்தார் என்பதும் இங்கு கவனிக்கதக்கது. நல்லோருக்கு நல்லோர் மூலம் உதவி வரும் என்பது தர்மத்தின் விதி, தர்மத்தை நம்பியோர் உணரும் விதி. சிவனை நம்பியோர் அதை உணர்வார்கள். இவர்கள் உணர்ந்தார்கள்.
  நீங்கள் நல்ல அடியாராக முழு அன்போடு சிவதர்மத்தை சிக்கென பிடித்து நின்றால், முழு சரணாகதி அடைந்தால் இந்த அதிசயம் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும்
  ஆண்டி அரசனானதும், பூசாரி கோடீஸ்வரனானதும், அடியார்க்கு அடியான் இல்லற கடமையில் இருந்து விடுபட்டதும், மன்னன் மானிட உடலோடு கயிலை அடைந்ததும் அவ்வகை அதிசயங்களே
  அது உங்களுக்கும் நடக்கும்.
  சேரமான் நல்ல அடியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், அடியாரின் நல்வாழ்வு எதில் முடியும் என்பதற்கும் மிகபெரிய உதாரணமான நாயனார்.
  சேரமான் பெருமானி வாழ்வு குருபக்திக்கு மிக சிறந்த சான்று, ஆம் அந்த மன்னனும் சிவனடியாருமான சேரமான் நிச்சயம் கயிலாயத்தை அடைந்திருபபர், சுந்தரர் வரவில்லை என்றாலும் அடைந்திருப்பார் ஆனால் நெடுநாள் ஆகியிருக்கும் இன்னும் ஏகபட்ட சோதனைகள் வந்திருக்கும்
  ஒரு குருவிடம் தன்னை அப்படியே ஒப்புகொடுத்தார், குருவினை அப்படியே பின் தொடர்ந்தார் இதனால் மானிட உடலோடு கயிலாயம் சென்றார், அங்கே தமிழில் பாடும் வரமும் பெற்றார்
  சிவன் அவரை அழைக்கவில்லை, அவரின் குருவும் என்னுடன் வா என அழைக்கவுமில்லை, சங்கரராவது அவர் சீடர் பத்மபாதரை அழைத்துத்தான் கங்கையினை கடக்க வைத்தார்
  ஆனால் இங்கோ அழைப்பே சேரமானுக்கு இல்லை ஆனாலும் என் குருவினை கண்டுவிட்டேன் இனி ஒரு நிமிடம் அவரின்றி வாழேன், அவருக்கு பண்விடை செய்யாமல் வாழேன் என சேரமான் கொண்ட குருபக்தி அவரை உடலோடு கயிலாயம் சேர்த்தது.
  அதுவும் குருவுக்காய் எழுதிய பாடல் சிவன் முன்னால் பாடபடும் அளவு மிகபெரிய ஆசீர்வாதத்தை கொடுத்தது, சேரமானின் குருபக்தி சொன்ன மிக பெரும் விஷயம் இது.
  ஆம் எவ்வளவு பெரும் வரம்பெற்றவனாயினும் நினைத்தாலே சிவனை அழைத்து வரம் வாங்கும் சக்தி மிக்கவனாயினும் ஒரு குரு வேண்டும் அவராலே கரைசேர முடியும் என்பதே சேரமான் வாழ்வின் தத்துவம்
  தன் குருவினை கண்டு அவர்பாதம் பணிந்த சிவபக்தன் சேரமான் கயிலாயம் அடைந்ததும், மிகபெரும் சிவபக்தனான ராவணன் குரு தேவையில்லை என தன் போக்கில் அலைந்து அழிந்ததும் புராண செய்திகள்
  ஆம் நல்ல குருவிடம் அகங்காரம் நீக்கி தன்னை ஒப்படைத்திருந்தால் ராவணனும் நாயன்மார் ஆகியிருப்பான் ஆனால் விதி அது அல்ல‌
  எவ்வளவு பெரும் பக்தியில் நீங்கள் இருந்தாலும், தெய்வமே உங்களுக்கு சக்தி பல கொடுத்தாலும் நல்ல குரு வழியில் அவரிடம் பணிந்து நில்லுங்கள் என்பதுதான் சேரமான் காட்டும் நல்வழி. குரு ஒருவரே இம்மானிட பிறவியில் உங்களுக்கு உகந்த வழிகாட்டும் தெய்வத்தின் பிரதிநிதி என்பதை மனதில் வையுங்கள்.
  குரு அருள் இன்றி வழிகாட்டுதல் இன்றி பயணபட்டால் எளிதாக இலக்கினை அடையலாம் இல்லையேல் காடெல்லாம் சுற்றி ஒரு கட்டத்தில் மனம் சலிப்புற்று திசைமாறலாம். குரு எனும் திசைகாட்டி மகா அவசியம் என்பதை எக்காலமும் மனதில் நிறுத்துங்கள்
  சேரமான் சகல அதிகாரம் பெற்ற, சிவனே சிலம்பு ஒலித்து பேசிய பெரு அடியாராய் இருந்தும் இதைத்தான் செய்தார், அவருக்கு எல்லாம் எளிதே வாய்த்தது
  அவர் வழியில் எல்லாம் சிவனே என நில்லுங்கள், எதற்காகவும் சிவனையோ அவரின் பூஜைகளையோ விட்டுவிடாமல் அவருக்கே முன்னுரிமை கொடுங்கள், அப்படியே அவன் காட்டும் குருவின் காலை இறுக‌ பற்றிகொள்ளுங்கள்
  அந்த பரம்பொருள் உங்களை முழுக்க ஆக்கிரமித்து தன்னை போல் உங்களையும் மாற்றி உங்களை போல் இருப்பவரை உங்களுடன் சேர்த்து வழிநடத்தி கடைசியில் தன் பாதமும் அழைத்து கொள்வார்.

  Latest articles

  சேரமான் பெருமாள் நாயனார்- 02

  ... பரவையார் சேரமானை அரசனாக கண்டு வணங்கி அவனுக்கு தனிமேடையிட்டு அமுதுபடைத்தார், அது அக்கால வழக்கமாய் இருந்தது. அரசன் மட்டும் முக்கனி உண்ணுதல் எனும் பெருமை இருந்தது. தனி மேடையில் அதை படைத்தார்...

  சேரமான் பெருமாள் நாயனார்- 01

  சேரமான் பெருமான்- கழறிற்றறிவார் நாயனார்- 01 கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்" : சுந்தரமூர்த்தி நாயனார் ஞானிகள் எனும் ரிஷிகளுக்கும் இந்த அடியார்களுக்கும் சில வித்தியாசம் உண்டு ஞானிகளும் ரிஷிகளும் உருவாகி வருவார்கள், ஆனால் சிவனடியார்...

  சேரமான் பெருமாளும்.. இஸ்லாமும்…

  இந்த சேரமான் பெருமான் கழறிற்றறிவார் நாயனார் வரலாற்றை படிக்கு முன் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் இங்கு ஒரு குழப்பம் உண்டு ஒரே ஒரு சேரமான் என்றொருவர் இருந்ததாகவும் அவர் இஸ்லாமை தழுவி...

  சேரகுல வேளாளர்

  வேளாளர் என்ற பெயர் வேளாண்மையை பின்னணியாக கொண்டு உருவானது. வேளாளரின் மறுபெயரான வெள்ளாளர் என்பதும் வெள்ளத்தை ஆள்பவன் என்ற பொருளில் உருவானதாகும். இந்த இரண்டு பெயர்களும் இவர்கள் வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள் என்பதை...

  Related articles

  Leave a reply

  Please enter your comment!
  Please enter your name here